ஆரண்ய காண்டம்:
ஆரண்யம் என்றால் காடு , இந்த கான்கிரிட் காடான சென்னையில் கதை முழுவதும் நகர்வதால் இயக்குனர் இப்பெயரை வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட படம் இது ! பல்வேறு காரணங்களால் இப்போது தான் வெளி வந்திருக்கிறது!
கதை என்னவென்றால், ஊரில் இரண்டு பெரிய ரவுடி கும்பல் இருக்கிறது. அதில் ஒரு கும்பல் ஜாக்கி ஷெரபுடையது. போதை பொருள் பிசினஸ் ஒன்று வரும்போது ஜாக்கி அதை வேண்டாம் என்று சொல்லவே, "நான் தனியாக செய்கிறேன்" என்று கிளம்புகிறார் அவரின் ஆளான சம்பத். அதனால் பின்னாடியே அவரை கொல்ல ஆள் அனுப்புகிறார் ஜாக்கி. மேலும் சம்பத்தின் மனைவியையும் கடத்திவிடுகிறார்கள். அந்த போதை மருந்து ஜமீனாக இருந்து ஏழையான அப்பா-மகனிடம் கிடைக்கிறது. அதை அவர்கள் வில்லனிடமே விலை பேச வில்லன் கும்பல் அந்த அப்பாவை கடத்திக்கொண்டு போய்விடுகிறது. மற்றொரு வில்லன் கும்பல் போதை மருந்தை ஜாக்கியிடம் கேட்க சம்பத்தை காட்டுகிறார் ஜாக்கி. அதனால் அவர்களும் சம்பத்தை போட்டு தள்ள அலைகிறார்கள். இந்நிலையில் ஜாக்கியால் கடத்திவரப்பட்டு அவரோடு வாழும் பெண்ணிற்கும் ஜாக்கியின் எடுபிடியான ரவிகிருஷ்ணாவிற்க்கும் காதல் மலருகிறது. இருவரும் தப்பிக்க நினைக்கிறார்கள். இருவரும் தப்பித்தார்களா? சம்பத் தப்பித்து மனைவியை மீட்டாரா? அந்த அப்பா என்ன ஆனார் ? என்பதற்கெல்லாம் விடை சொல்கிறது கிளைமேக்ஸ்.
நிச்சயம் தமிழ் சினிமாவில் இது புது முயற்சி. படம் நன்றாக வரவேண்டும் என்று நிறைய மெனக்கேட்டிருக்கிறார்கள். அவர்களின் முயற்சி வீண் போகவில்லை, நன்றாகவே வந்திருக்கிறது. சில காட்சிகள் யுகிக்கும்படி இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. ரவிகிருஷ்ணாவின் முடிவு எதிர்ப்பார்க்காதது. அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். 'புதுப்பேட்டை'க்கு பிறகு யுவனுக்கு புகுந்து விளையாட ஒரு படம் கிடைத்திருக்கிறது. பாடல்கள் இல்லாததால் யுவனின் பின்னணி இசைக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். சம்பத் அந்த மகனிடம் "உனக்கு, உன் அப்பாவ ரொம்ப புடிக்குமா?" என்று கேட்க்கும்போது "அப்படியில்ல, ஆனா அவர் என் அப்பா" என்று சொல்லும்போதும், அந்த இளம்பெண் கடைசியில் "சப்பையும் ஒரு ஆம்பளதான், எல்லா ஆம்பளையும் எனக்கு சப்பை தான்" என்று சொல்லும்போதும் வசனங்களில் நம்மை ஈர்க்கிறார் இயக்குனர்.
மறுபுறம் யதார்த்தம் என்று நீண்டநேரம் இருட்டையே காட்டுவதும், ஓடிக்கொண்டே இருப்பதும், அதை அடிக்கடி ஸ்லோ மோசனில் காட்டுவதும் எரிச்சலுட்டுகிறது. பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பயங்கரமான சண்டைக்காட்சிகளுக்கும் மெலோடியாக வருவது ஒட்டாமல் இருக்கிறது.
அவசியமான குறிப்புகள்:
1 . நீங்கள் படம் பார்க்க போனால் பெண்களை கூட்டி செல்வதை தவிர்ப்பது நல்லது! ஏனென்றால் நிறைய கேட்ட வார்த்தைகள் வருகிறது, மேலும் ஜாக்கி ஷெரபின் தேவையற்ற நிர்வாண காட்சி வேறு!!
2 "எது தேவையோ அதுவே தர்மம்" என்று நாகதாதனின் வார்த்தைகளை டைட்டிலில் பொட்டு கதையை நியாயப்படுத்துகிறார் இயக்குனர். அதன்படி வைத்துக்கொண்டால், எனக்கு இப்போது ஒரு கோடி ருபாய் தேவைப்பட்டால் இந்தப்பட இயக்குனரை போட்டுத்தள்ளிவிட்டு அவரின் வீட்டில் இருந்து ஒரு கோடி ரூபாயை திருடிவந்தால் அது நியாயமாகுமா? என்ன பாஸு லாஜிக் இது??
கூட்டி கழித்து பார்த்தால் படம் நன்றாகத்தான் இருக்கிறது.
ஆரண்ய காண்டம்- ஒரு புது அனுபவம்.
