Wednesday, 7 March 2012

விதி

"டேய் வசந்த், இங்க வா"

"தோ வர்றேன் பாய்"  

"இந்தா இந்த சாப்பாட்ட அந்த மாடி வீட்டு பசங்களுக்கு குடுத்துட்டு வா"

"இந்த டைம்லயா பாய், நா போமாட்டேன்"

"டேய் மணி 9.30 தான டா ஆகுது, போய் குடுத்துட்டு வா"

"நா தான் நைட்டு எங்கயும் போகமாட்டேன்னு தெரியும் ல அப்பறம் ஏன் என்ன போகசொல்றீங்க?"

"நீ என்ன பொம்பள புள்ளயாடா, அதுங்களே இந்த நேரத்துல தைரியமா சுத்துங்க, உனக்கென்ன டா"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது, நா போமாட்டேன் அவ்ளோதான்"

"அவனுங்க நாளைக்கு காலைல ரூம்ம காலி பண்ணிட்டு ஊருக்கு போறாங்களாம் டா, பழைய பாக்கிலாம் சேத்து இன்னிக்கு செட்டில் பண்ணிடராங்கலாம்.. இன்னிக்கு விட்ட அப்பறம் காசு வராது டா.. கடை நெலம தான் உனக்கு தெரியும்ல.. எனக்காக போய் சாப்பாட்ட குடுத்துட்டு காச வாங்கிட்டு வா டா ", பாவமாக.

"சரி போறேன்! இதான் கடைசி! சரியா?" என்றபடியே சைக்கிளில் சாப்பாட்டு கூடையை மாட்டிக்கொண்டு கிளம்பினான் வசந்த்.

          வசந்த் அந்த பாய் கடையில் தான் ஐந்தாறு வருடமாய் வேலை செய்து கொண்டிருக்கிறான். 23 வயது, வெள்ளை நிறம், 5 '9 உயரம். இந்திப்பட ஹீரோ போலவே இருப்பான். பார்த்தால் சத்தியமாக ஹோட்டலில் வேலை செய்பவன் போல தோன்றாது. அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கொஞ்சம் பயந்த சுபாவம். 'முனி' 'காஞ்சனா' லாரன்ஸ் போல 'இருட்டு' தான் இவனுக்கும் எதிரி.  கரண்ட் போனாலே நடுநடுங்கி விடுவான். இப்போதெல்லாம் நாளைக்கு நிறைய நடுங்குகிறான். அவர்கள் வீடு வந்தது.  நான்கு பேர் தங்கியிருக்கிறார்கள்.சைக்கிளை நிறுத்திவிட்டு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு மேலே சென்றான்.

  
 "டக் டக்"

"டக் டக் " இரண்டு முறை கதவை தட்டியதற்க்கு எந்தப் பதிலும் இல்லை.

"அண்ணே, நான் தான் பாய் கடைப்பையன். கதவ தொறங்...." சொல்லி முடிக்கும் முன் கதவு திறக்கப்பட்டது.

"வாடா தம்பி"

"இந்தாங்க அரவிந்தண்ணே சாப்பாடு, காசக்குடுத்திங்கன்ன கெளம்பிடுவேன்"

"ஏண்டா பறக்குற"

"இல்லன எனக்குதான் இருட்டுன்னா பயம்னு உங்களுக்கு தெரியுமே.. கரண்ட் கிரன்ட்போயிட போகுதுணா"
 
"தம்பரி, நீ பேப்பரெல்லாம் படிக்கமாட்டியா? இன்னிலேந்து ரெண்டு மணிநேரம் தான் கரென்ட் போகும். அது மதியானமே போயிடுச்சு.. நீ வா"

உள்ளே நுழைந்து சாப்பாட்டை பிரிக்க ஆரம்பித்தான்.

"இன்னொரு அண்ணன் எங்கண்னே"

"சுசியா டா, நாளைக்கு ஊருக்கு போறதுக்கான விஷயமா வெளிய போயிருக்கான்டா, நேரா பஸ் ஸ்டாண்டு வந்திருவான்"


"ஐயோ நா அவருக்கும் சேத்து சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேனே"

"அப்படியா, பரவாயில்ல அத நீயே சாப்பிடு.. வா"

"ஐயோ வேணாம்னே, லேட்டாயிடும்"

"டேய் சாப்டுடா"

                 அந்த மிரட்டலுக்கு பயந்து ஒப்புக்கொண்டான். நான்கு பேரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். கரண்ட் போய்விடகூடாது என்று வேண்டிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான் வசந்த். பாதி சாப்பிட்டு முடிப்பதற்குள் வசந்த் பயந்தமாதிரியே கரண்ட் போனது.

"நா அதான் அப்பயே சொன்னேன்ல என்னே இப்டி பண்றீங்க?" என்றான் வசந்த் அழும் குரலில்.

"டேய் நானாடா கரன்ட்ட புடுங்குனேன்? என்கிட்ட கோவிச்சிக்குற? இரு டா அரை  மணி நேரத்துல வந்துரும்"

               ஒன்னரை மணிநேரம் ஆகிவிட்டது, கரண்ட் வருவதற்க்கான அறிகுறியே இல்லை. வசந்த் அழவே ஆரம்பித்துவிட்டான். 

"டேய் ஏன்டா அழுவுற? இப்போ என்ன ஆச்சு?"

"இனிமே நா எப்டி கடைக்கு போவேன்? மணி 11 க்கு மேல ஆச்சு.. பாய் வேற கடைய பூ..ட்..டி..ரு..ப்பாரு"

  "சேரி அழுவாத, நைட்டு இங்க தூங்கு.. காலைல 4 மணிக்கு கெளம்புவோம், நாங்களே கொண்டுபோய் கடைல விடறோம்"

                 "சரிண்ணே" என்று வேறு வழியில்லாமல் அங்கேயே படுத்துக்கொண்டு அவர்களுடன் தூங்கினான்.

                       சரியாக அதிகாலை நாலு மணிக்கு எல்லோரும் கிளம்பினார்கள் பிணமாக.

                                       

                   அன்றைய அனைத்து செய்தித்தாள்களிலும்  இதுதான் தலைப்புச்செய்தி....

"பல வங்கிக்கொள்ளையில் ஈடுப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் அரவிந்த் மற்றும் அவனது கூட்டாளிகள்   2 கல்லூரி மாணவர்கள் மற்றும்  ஒரு ஹோட்டல்   ஊழியன் உட்பட நான்கு பேர் போலிசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்". 




 





          
  

Thursday, 1 March 2012

யார் வந்தால் என்ன ??





ஆர்ப்பு- சத்தம் இந்த இளந்தமிழனின் இரண்டாவது ஆர்ப்பு 




                       கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளது.  நாளைக்கு இந்நேரம் முடிவுகள் அறியப்பட்டு யார் ஆட்சி அமைக்கபோகிறார்கள் என்பது தெரியவந்திருக்கும். அனைவரும் எதிர்நோக்கி உள்ள தேர்தலின் முடிவு நம் தலைஎழுத்தை மாற்றப்போகும் முடிவு என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறானது.

                         தேர்தல் அறிக்கையில் நாங்கள் அதை தருகிறோம் நாங்கள் இதைத் தருகிறோம் என்று போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அள்ளி வீசினார்கள். அதில் ஒருவர் கூட நாங்கள் நல்ல ஆட்சி தருவோம் என்று சொல்லவில்லையே? அவர்கள் நல்ல ஆட்சிக்கு தேர்தல் அறிக்கையில் கூட இடம் தரவில்லை. பிறகெப்படி இவர்கள் நமக்கு நல்லது செய்வார்கள் ?? தப்பித்தவறி எதாவது நல்ல திட்டங்கள் வந்தால் எதிர் கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுவிடும். 500கோடிக்கு ஊழல் செய்துவிட்டு கடந்த ஆட்சிக்காலத்தில் 501 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது, நாங்கள் அவர்களை விட கம்மியாய் தான் ஊழல் செய்தோம் என்று நியாயம் பேசுவார்கள் .  

                             யார் வந்தால் என்ன?? நம் கஷ்டங்கள் தீரப்போவதில்லை. அடுத்த தேர்தல் முடிவின் போது கூட நான் இதே போன்று எழுதிக்கொண்டிருப்பேன். "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பார்கள். ஒருவர் குடும்பத்தை வளர்ப்பார்.  இன்னொருவர் கொடநாட்டை  வளர்ப்பார்.  இவர்கள் திருந்தப்போவதுமில்லை நமக்கு விடியப்போவதுமில்லை !!!