Friday, 5 October 2012

செல்லோ

                    "மறுபடியுமா?" என்று மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டே வெளியே சென்று முட்டிப்போடத் தொடங்கினான் ராகுல். காலையில் கிரவுண்டில் இதுபோல் முட்டிபோடும்போது கிடைத்தது அந்த செல்போன். Black கலர் Galaxy Ace. அது அவனை முழுவதும் ஆக்ரமித்திருந்தது. ராகுல் ஒரு பிரபல பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்றான் . அந்த வயதிற்கு  உண்டான அனைத்து குறும்புத்தனங்களையும் செய்வான் . மனசாட்சிக்கு கட்டுபட்டு நடப்பவன்.  பசங்க மத்தியில் ஹீரோ, ஆசிரியர்களுக்கு அராத்து !



     
                        இப்போது பிரச்சனை என்னவென்றால் அந்த செல்போன் தான்.  அடுத்தவர்களின் பொருட்களுக்கு இதுவரை துளிக்கூட ஆசைப்பட்டதில்லை. ஆனால் இந்த செல்போனை விட மனமில்லை அவனுக்கு. நண்பர்களிடம் சொன்னபோது "பேசாம பர்மா பஜார்ல வித்துடலாம் " என்றார்கள்.  ஆனால் இது தவறு என்று அவன் மனம் மூளைக்கு எஸ் எம் எஸ் அனுப்பிக்கொண்டே இருந்தது . மேலும் விற்கும் போது  இது திருட்டு மொபைல் என் யாராவது கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது ? என ஏகப்பட்ட எண்ணங்கள் அவனுக்குள்.

                    திருப்பிக்கொடுத்துவிடலாம் என முடிவு செய்து மொபைலை ஆன் செய்தான் .அது on ஆகிற மாதிரியே தெரியவில்லை . தொலைத்தவர்கள் தேடி வருவார்கள் , staff  யாரிடமாவது கொடுத்துவிடலாம் என AHM  ரூமிற்கு சென்றான். உள்ளே அவர்  அவனது கிளாஸ் டீச்சரிடம்  பேசிக்கொண்டிருந்தார். உடன் இன்னொரு பையனும் இருந்தான். எட்டிப்பார்த்தான் ..

"சார், இதுதான் உங்களோட பர்ஸ் ஆ பாருங்க "

"ஆமா சார்"

"டீச்சர்ஸ் நீங்களே இப்படி careless ஆ இருக்கலாமா"

"சாரி சார்"

"இந்தாங்க, எல்லாம் சரியா இருக்கா னு  பாருங்க"
...
"சார் நூறு ரூபாய் குறையுது......."

"எனக்கு ஏதும் தெரியாது சார்.. நான் எடுக்கல "

"இப்ப உண்மைய சொல்றியா இல்ல ...."
                                           
                                                             முகத்தை திருப்பிக்கொண்டான் ராகுல். AHM மின் பெரம்புச் சத்தமும் அந்த பையனின் அலறல் சத்தமும் கேட்டது. பகீரென்று இருந்தது அவனுக்கு. தான் போய் போனை கொடுத்ததும், அது வேறு on  ஆகவில்லை.. தான் தான் உடைத்துவிட்டேன் என்றால் என்ன செய்வது?  அல்லது சிம்மில் 1000 ரூபாய் இருந்தது .. தான் யாருக்காவது பேசிவிட்டேன் என்று 1000 ரூபாய் கட்டச்சொன்னால் என்ன செய்வது என்று மறுபடியும் மன ஓட்டங்கள்.  வெளியே வந்த அவனது கிளாஸ் டீச்சர் இவன் இருப்பதை கவனித்துவிட்டார்.

"டேய் இங்க என்ன பண்ற?"

"............."

"சொல்லு டா இங்க என்ன பண்ற?"

"AHM சார பாக்கவந்தேன் "

"சரி பாக்கட்ல என்ன? போன்? யாரோடது?"

"சார்..."

"சொல்லு டா.."

"அது.. அது.. அ..."

"ஓ அப்பவோடதா ..?"

"அ... ஆமா சார்"

"அவர் எங்க? எதுக்கு வந்தாரு?"

"வெளிய வண்டி பார்க் பண்ணிட்ட்ருக்கார்"

"இந்த மாசம்தான் parents மீட்டிங் கிடையாதே!  நெக்ஸ்ட் month தான் "

"அ ஆமா மறந்துட்டேன் சார்"

"சரி கெளம்பு"
             
                        உயிர் போய் வந்தது அவனுக்கு. என்னடா வம்பு இது தேவையில்லாத பிரச்சனை இதல்லாம் என்று தோன்றியது. நடக்கறது நடக்கட்டும் என்று கிளம்பினான். நடு கிரவுண்டில்  ஒரு ஆள் நின்று  எதையோ தேடிக்கொண்டிருந்தான், அதும் இவன் போனை எடுத்த அதே இடத்தில்! ஒருவேளை இந்த போன் இவனோடதா இருக்குமா? இவன் இவ்ளோ காஸ்ட்லியான ஸ்மார்ட் போன் வைத்திருப்பானா? ம்ம்க்கும்.. இப்போதெலாம் ஆளுக்கும் போனுக்கும் என்ன சம்மந்தம்?   தன் வீட்டிற்க்கு அருகே காய்கறி விற்கும் ஒரு அண்ணன் Galaxy S 2 வைத்திருப்பது நியாபகம் வந்தது . ம்ம் .. விசாரிப்போம்..  அப்படி அவனோடதாக  இருந்தால் போனை கொடுத்துவிடலாம். நமக்கு எந்த பிரச்சனையும் வராதுல.. ம்ம்     இன்றைக்கு முதல் முறையாய்  புன்னகைத்தான். அருகில் சென்றான். அவனும் ஏதோ விலைமதிப்புள்ள தொலைத்தது போலவே மிகவும் சோர்ந்து போயிருந்தான்.

"என்ன தேடறீங்க?"

"அது ஒன்னுமில்லை நீ போப்பா .."

"பரவாயில்லை .. சொல்லுங்க "

"அ.. அது.. செல்...."

"செல்லோ?"
                   அந்த ஆள் சொல்லும் போதே இவனும் கரெக்ட்டா சொல்லியிருந்தான். அவன் ஆம் என்று சொல்லவேண்டும் என்று துடித்துத்கொண்டிருந்தான். இந்த போன் ஆல் எவ்வளவு பிரச்ச்சனைகள் எத்தனை மனக்குழப்பங்கள் .

" ஆமா    "

"என்ன கலர்"

"black color செ . . . . "

"இந்த இதுவா பாருங்க" அவன் சொல்லி முடிப்பதற்குள் இவன் எடுத்து நீட்டியிருந்தான். அவன் கண்களில் அப்போது தான் அதை முதல் முறை  ஒரு மகிழ்ச்சி!

" உங்களோட black color cellphone இதுதானா?"

"தம்பி இது இது எப்படிப்பா உனக்கு கிடைச்சது"

"காலை ல இங்க முட்டி போட்டிருக்கும் போது கெடச்சது... அப்போலேந்து நிம்மதியே போச்சுங்க "

"ஆ ஆமாப்பா ரொம்ப நன்றி.. இதத்தான் தேடிட்ருந்தேன்..  காலை ல தம்பிய டிராப் பண்ண வந்தேன் அப்ப எப்படியோ மிஸ் ஆயிடுச்சு..."

"பரவால்ல விடுங்க! அதான் இப்ப கெடச்சிருச்சே"

"ரொம்ப நன்றி தம்பி .. கஷ்ட்டப்பட்டு வாங்குனது "

"   இட்ஸ் ஒகே.. நா வரேன் "

                                          ராகுலுக்கு இப்போது தான் நிம்மதி வந்தது. பொருளை அதன் சொந்தக்கரரிடமே   ஒப்படைச்சாச்சு . "ராகுல் நீ கிரேட் டா" என்று தன்னைத்தானே புகழ்ந்து தன சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்..

------------------------------------------------------------------

                    அடுத்த நாள் முதல் hour கேம்ஸ் ஹவர் என்பதால் நண்பர்களுடன் football விளையாடிக்கொண்டிருந்தான்.அப்போது யாரோ ஒரு நபர் ..

"யாருப்பா இங்க ராகுல்..??" என்று கத்தினார். உடனே விளையாடுவதை நிறுத்திவிட்டு அவரரருகே சென்றான்.

"நான் தான் ராகுல்.. என்ன விஷயம் சொல்லுங்க"

"என் பேரு கார்த்திக் .. என் தம்பி இங்க தான் படிக்கிறான். நேத்து அவன் எனக்குத் தெரியாம என்னோட போனை எடுத்துட்டு வந்து தொலைச்சிட்டான்..  இன்னைக்கு  கம்ப்ளைன்ட் பண்ணலான்னு  வந்தப்போ உன்னுடைய கிளாஸ் டீச்சரை மீட் பண்ணேன். அவர் நேத்து உன் பாக்கெட்ல ஒரு போன பாத்தராமே.. உன் அப்பாகிட்ட உடனே போன் ல பேசினாராம் .. அவர் இங்க வரவும் இல்லை, அவர் அப்படி ஒரு போனும் யூஸ் பண்ணலைன்னு சொல்லிட்டாராம்.. சோ அதநால உன்கிட்ட  இருந்த போன் என்னோடததா இருக்கணும் ன்னு நெனக்கறார்..சோ நீயா அந்த போன குடுத்துட்டா எந்த பிரச்சனையும் இல்ல ... அப்படி இல்லனா  AHM ட்ட போய் டீல் பண்ணிக்கலாம்.. எப்டி வசதி..?"

                    ராகுல் தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது...  AHM ரூமை நோக்கி நடந்தபோது அவன் காலில் ஏதோ மிதிப்பட்டது .. அதைபார்த்ததும் பேரதிர்ச்சி அடைந்தான். அது BLACK COLOR CELLO PEN . . . . .